search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிசிஐடி போலீஸ்"

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 5 நாட்கள் நடத்திய சோதனை இன்றுடன் நிறைவு பெற்றது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஏற்கனவே தேசிய, மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது. துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் 5 வழக்குகளுக்கும் தலா ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வ‌ருகிறார்கள்.

    இதனிடையே சென்னையில் இருந்து தடயவியல் துறை கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசர் தலைமையில் உதவி இயக்குனர்கள் விசாலாட்சி, மணிசேகர், வல்லுனர் சண்முகசுந்தரம், வெடிகுண்டு நிபுணர்கள் வாசுதேவன், பிள்ளை ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கடந்த 23-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தனர்.

    துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் மற்றும் வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் அவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று 4-வது நாளாக போலீசாரின் கள ஆய்வு நடைபெற்றது. பொதுமக்கள் பேரணியாக சென்ற பகுதிகளில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் துணையோடு ஆய்வில் ஈடுபட்டார்கள்.


    கலவரத்தின் போது எரிக்கப்பட்டும், அடித்து சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் கிடந்த சுமார் 150 வாகனங்களை சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் அருகே தங்களது கட்டுப்பாட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வைத்து உள்ளனர். இந்த வாகனங்களில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்பது குறித்து அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உதவியுடன் வாகனங்களின் விவரங்கள் கண்டறியப்பட்டன.

    அனைத்து வாகனங்களிலும் அதிநவீன கருவிகளின் துணையுடன் துல்லியமாக சோதனை செய்தனர். மாவட்ட போலீஸ் மோட்டார் பிரிவு மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த ஒவ்வொரு வாகனத்தின் பேட்டரியையும் கழற்றி ஆய்வு செய்த‌னர். குறிப்பாக கல்வீச்சில் சேதமடைந்த போலீஸ் வாகனங்களில் வெகுநேரம் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து சோதனையை இன்று சி.பி.சி.ஐ.டி போலீசார் நிறைவு செய்தார்கள்.

    சோதனை நிறைவை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இரவு நேரத்தில் கண்காணிக்கும் பொருட்டு ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கண்ணாடி உடைக்கப்பட்டு இயங்கக்கூடிய நிலையில் உள்ள வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனங்களில் பாதுகாப்பு கருதி பேட்டரிகள் அகற்ற‌ப்பட்டன.

    இதனிடையே துப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 303 ரக துப்பாக்கிகள் 5, எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் 5, கைத்துப்பாக்கிகள் 3 ஆகியவற்றை போலீசார் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    துப்பாக்கி சூட்டின்போது போலீசார் பயன்படுத்திய தோட்டாக்கள் இன்னும் ஒப்படைக்கப்படாத நிலையில் பொதுமக்களிடமும் சில தோட்டாக்கள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. அவற்றை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைக்கவேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    ×